Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

previous padalam   15 - நகர்செய் படலம்   next padalamnagarsei padalam

Ms Revathi Sankaran (2.99mb)




(எனஅரி புகல)

எனஅரி புகலக் கேளா இன்னதோ நிகழ்ச்சி யென்றான்
     அனையதற் பின்னர் ஆண்டை அமரர்கம் மியனை நோக்கி
          வனைகழற் சூர பன்மன் மற்றியாம் உறைதற் கொத்த
               புனைதிரு நகரம் வல்லே புரிமதி புலவ வென்றான். ......    1

(என்றலுங் கடவுள்)

என்றலுங் கடவுள் தச்சன் இறைஞ்சியே நுமக்குச் செய்யும்
     வென்றிகொள் மூதூ ருக்கு வியலிடம் உரைத்தி யென்ன
          நன்றெனப் புகரோன் தானே நகர்களுக் கெல்லை கூற
               அன்றவை வினவித் தென்பால் அளக்கரை அடைந்தான் அன்றே. ......    2

(ஆசறு கடலி னூடே)

ஆசறு கடலி னூடே அயுதமோர் எட்டா யுள்ள
     யோசனை எல்லை முன்னோன் உறுநக ராகக் கோலிக்
          காசினி வரைகள் தம்மால் கதுமெனத் தூர்த்து மிக்க
               பாசறை கொண்டே ஒப்ப அணித்தலம் படுத்துப் பின்றை. ......    3

(காயுறு கதிர்கள்)

காயுறு கதிர்கள் காஞ்சிக் கம்பைமா நீழல் வைகும்
     நாயகி நகர மென்ன நாடொறுஞ் சூழு மாற்றால்
          சேயுயர் விசும்பிற் போகச் செம்பொனால் மதிலைச் செய்து
               வாயில்கள் நான்க மைத்து ஞாயிலும் வகுத்து நல்கி. ......    4

(நாற்பெரு வாயி)

நாற்பெரு வாயி லூடு மேருவே நண்ணிற் றென்ன
     மாற்பெருங் கோபு ரங்கள் மணிவெயில் எறிப்ப நல்கி
          நூற்படும் ஒழுக்கம் நாடி நூறியோ சனையொன் றாகப்
               பாற்படு மாட வீதி பற்பல அமைத்து மன்னோ. ......    5

(முப்புரம் ஒருங்கு)

முப்புரம் ஒருங்குற் றென்ன மும்மதில் அவற்றுள் நல்கி
     ஒப்பருந் திருவின் வீதி உலப்பில புரிந்து சோமன்
          வைப்பெனச் செம்பொன் மாடம் வரம்பில வகுத்து மாதர்
               மெய்ப்படும் ஆடல் கூரும் வியலிடம் பலவுஞ் செய்து. ......    6

(மாளிகை தோறு)

மாளிகை தோறுந் தெற்றி மண்டபம் அணிசேர் முன்றில்
     கோளரி தயங்கு பொற்பிற் கோபுரங் குன்றம் அம்பொற்
          சூளிகை அரங்க மன்றஞ் சுடருமேற் றலங்கள் தூய
               சாளரஞ் சோலை வாவி தனித்தனி யாகத் தந்து. ......    7

வேறு

(ஆயதன் நடுவுற)

ஆயதன் நடுவுற அயுத வெல்லையில்
     பாயதோர் நெடுமதில் பயில நல்கியே
          மாயவள் திருமகன் வைக ஆங்கொரு
               கோயிலை எழில்பெறக் குயிற்றி னானரோ. ......    8

(வாரணம் விரவுதேர்)

வாரணம் விரவுதேர் மக்கள் போந்திடுந்
     தோரண வாயில்கள் தொடர்ந்த தெற்றிகள்
          சீரணி தபனியச் சிகர கோபுரங்
               காரணி மணிவரை கவின்கொள் சூளிகை. ......    9

(ஆனைகள் பயிலிடம்)

ஆனைகள் பயிலிடம் அயங்கள் சேரிடம்
     சேனைகள் உறைவிடம் தேர்கள் வைகிடம்
          தானவர் தலைவர்கள் சாருந் தொல்லிடம்
               ஏனைய அரக்கர்கள் இனிது சேரிடம். ......    10

(நாடரும் விசும்புறை)

நாடரும் விசும்புறை நாரி மாரெலாம்
     ஆடலை இயற்றிடும் அரங்க மண்டபம்
          பாடலின் முறைபயில் பைம்பொன் மண்டபம்
               மாடக யாழ்முரல் வயிர மண்டபம். ......    11

(மயில்புற வோதிமம்)

மயில்புற வோதிமம் வன்ன மென்கிளி
     குயில்முத லாகிய குலவு மண்டபம்
          இயலுறு யூகமான் இரலை செச்சைகள்
               பயிலுறு வாரணம் பரவும் மண்டபம். ......    12

(சந்ததம் மறையொலி)

சந்ததம் மறையொலி தழங்கு மண்டபம்
     முந்திய வேள்விகள் முயலும் மண்டபம்
          மந்திர வியல்பினோர் மருவு மண்டபம்
               இந்திரன் முதலினோர் இருக்கும் மண்டபம். ......    13

(திருமிகு நிருதர்கோன்)

திருமிகு நிருதர்கோன் தேவர் போற்றிட
     அரசியல் புரியுமத் தாணி மண்டபம்
          இருநிதி உளவெலாம் ஈண்டும் மண்டபம்
               பரனருள் படைக்கலம் பயிலும் மண்டபம். ......    14

(அருந்துறும் அமிர்துறழ்)

அருந்துறும் அமிர்துறழ் அடிசில் மண்டபம்
     நரந்தையே பாளிதம் நறைகொள் சாந்தகில்
          பெருந்துவர்க் காயடை பிறவுஞ் சாலவும்
               இருந்திடு கின்றபேர் எழில்கொள் மண்டபம். ......    15

(மானனை யார்பலர்)

மானனை யார்பலர் மருவு மண்டபம்
     ஆனதோர் ஊசலாட் டயரும் மண்டபம்
          பானிலா உமிழ்தரு பளிங்கின் மண்டபம்
               வானுயர் சந்திர காந்த மண்டபம். ......    16

(மாமணி யொளிர்)

மாமணி யொளிர்தரு வசந்த மண்டபம்
     காமரு பவளமார் கவின்கொள் மண்டபம்
          ஏமரு மரகதத் தியன்ற மண்டபம்
               தாமரை உயிர்த்திடு தரள மண்டபம். ......    17

(கோவியல் மரபி)

கோவியல் மரபினோர் கொள்கைக் கேற்றன
     யாவையும் நல்கியே இதனுக் குள்ளுற
          மாவுறு சூரபன் மாவுந் தன்குலத்
               தேவியும் உறையவோர் உறையுள் செய்தரோ. ......    18

(இங்கிது சூழ்தர)

இங்கிது சூழ்தர எண்ணி லாதன
     மங்கல நிறைதரு மாட வீதிகள்
          அங்கவன் துணைவிய ராகி வந்திடும்
               நங்கையர் மேவர நலத்தின் நல்கியே. ......    19

(காவியுங் குமுத)

காவியுங் குமுதமுங் கமல முஞ்செறி
     வாவிக ளோடைகள் பொய்கை வான்றொடு
          பூவியல் தண்டலை பொலன்செய் குன்றுடன்
               யாவையும் முறைபட இயற்றி னானரோ. ......    20

(அள்ளலந் திரைக்கடல்)

அள்ளலந் திரைக்கடல் அகழி யாகவே
     யுள்ளுறு நகரிடை உறையுங் கோயிலில்
          தள்ளரும் பொன்சுடர் தழைத்த பொற்பினால்
               வெள்ளிய தானது மேலைப் பொன்னகர். ......    21

வேறு

(இன்னவையும் ஏனவை)

இன்னவையும் ஏனவையும் எண்ணிமனத் தால்அருளித்
     தன்னிகரில் அவுணர்பிரான் சயத்தோடு பெருந்தலைமை
          மன்னவரு தலின்வீர மகேந்திரமே யாமென்றே
               அந்நகருக் கோர்நாமம் அணிபெறுத்தி அளித்தனனே. ......    22

(ஏமபுரம் இமையபுரம்)

ஏமபுரம் இமையபுரம் இலங்கைபுரம் நீலபுரம்
     சோமபுர மெனப்புகலுஞ் சுவேதபுரம் அவுணர்புரம்
          வாமபுரம் பதுமபுரம் மகேந்திரமா புரமென்னுங்
               காமர்புரத் தெண்டிசைக்குங் காட்சிபெற உதவினனால். ......    23

(மாண்டகுசீர் கெழு)

மாண்டகுசீர் கெழுவீர மகேந்திரமிவ் வாறுதவி
     ஆண்டதுபோல் அகன்பரப்பில் ஆசுரம்என் றொருநகரம்
          நீண்டவட கடல்நடுவண் நிருதர்புகழ்ந் திடுமாற்றால்
               காண்டகைய சீயமுகக் காவலற்கு நல்கினனே. ......    24

(மற்றுளவெம் புணரி)

மற்றுளவெம் புணரிதொறும் வயின்வயின்சேர் தீவுதொறுங்
     கொற்றமிகுஞ் சூரபன்மன் குலவுபெருந் தானையெலாஞ்
          சுற்றமுடன் மேவுதற்குத் தொன்னகரம் பலவமைத்துக்
               கற்றுணருஞ் சிறுவரொடுங் கம்மியன்மீண் டேகினனே. ......    25

வேறு

(நீடு மேரு நெடு)

நீடு மேரு நெடுவரைத் தென்புடை
     நாடு சீர்கெழு நாவலந் தீவினில்
          கூடு கின்றபொற் கூடந் தனக்கொரு
               மாடு போந்தனன் மாமயன் தாதையே. ......    26

(பகரு கின்றஅப்)

பகரு கின்றஅப் பாற்படும் எல்லையில்
     தகுவர் போற்றிடுந் தாரகற் காகவே
          மகிழ்வின் நீரொடு மாயா புரமெனா
               நகர மொன்றை அணிபெற நல்கினான். ......    27

(வினையர் தம்மொடு)

வினையர் தம்மொடு விச்சுவ கன்மனும்
     இனைய வூர்கள் இயற்றியம் மாயையின்
          தனய னுக்கிவை சாற்றலும் நன்றெனா
               அனிக மோடங் கடைந்தனன் என்பவே. ......    28

ஆகத் திருவிருத்தம் - 2773



previous padalam   15 - நகர்செய் படலம்   next padalamnagarsei padalam

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]