Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

previous padalam   1 - மாயைப்படலம்   next padalammAyaip padalam

Ms Revathi Sankaran (4.96mb)
(1 - 43)



Ms Revathi Sankaran (4.68mb)
(44 - 86)




(ஊரி லான்குணங்)

ஊரி லான்குணங் குறியிலான் செயலிலான் உரைக்கும்
     பேரி லான்ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோன்
          சாரி லான்வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு
               நேரி லான்உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான். ......    1

(வீறு காசிபன்)

வீறு காசிபன் சிறார்களாய் மேவிய அறுபான்
     ஆறு கோடிய தாகிய அவுணருக் கரசன்
          மாறில் மங்கல கேசியாம் அரக்கியை மணந்து
               பேற தாகவே சுரசையென் றொருமகட் பெற்றான். ......    2

(தூய அம்மகள்)

தூய அம்மகள் வளர்ந்தபின் புகர்எனுந் தொல்லோன்
     தீய மாயையின் கல்விகள் யாவையுந் தெருட்டி
          ஆய விஞ்சையின் வல்லபம் நோக்கியே அவட்கு
               மாயை என்றுபேர் கூறினன் மனத்திவை மதிப்பான். ......    3

(இன்ன லெய்திய)

இன்ன லெய்திய அவுணர்கள் சிறுமையும் இமையோர்
     மன்ன னாதியர் பெருமையும் வானநாட் டுறைவோர்
          நன்ன லந்தொலைந் தசுரரால் மெலிந்திட நந்தி
               சொன்ன வாய்மையுங் கருதினன் புகரெனுந் தூயோன். ......    4

(கருதி இன்னண மேல்)

கருதி இன்னண மேல்வருந் தன்மையுங் கண்டு
     குருதி தோயும்வேல் அவுணர்கோன் பயந்தகோற் றொடியை
          வருதி என்றுகூய் வரம்பறு பேரருள் வழங்கி
               ஒருதி றந்தனைக் கேளெனத் தேசிகன் உரைப்பான். ......    5

(வனச மங்கைதன்)

வனச மங்கைதன் கணவனால் வாசவன் தன்னால்
     முனிவர் தேவரால் அளப்பிலா அவுணர்கள் முடிந்தார்
          அனையர் மேன்மையை யாவரும் உணர்குவர் அதனால்
               உனது தந்தையும் வலியிழந் தேயொடுங் குற்றான். ......    6

(மின்பொ ருட்டினால்)

மின்பொ ருட்டினால் கேதகை மலர்ந்திடும் விளங்கும்
     என்பொ ருட்டினால் மாமழை சொரிந்திடும் ஈட்டும்
          பொன்பொ ருட்டினால் யாவுமுண் டாமதுபோல
               உன்பொ ருட்டினால் அவுணர்க்கு மேன்மைய துளதாம். ......    7

(வாச மாமலர் மடந்தை)

வாச மாமலர் மடந்தையும் வந்தடி வணங்கப்
     பேசொ ணாததோர் பேரழ குருக்கொடு பெயர்ந்து
          காசி பன்றனை அடைந்துநின் வல்லபங் காட்டி
               ஆசை பூட்டியே அவனொடும் புணருதி அல்லில். ......    8

(அல்லி டைப்புணர்)

அல்லி டைப்புணர்ந் தசுரர்கள் தம்மையுண் டாக்கி
     மெல்ல அங்கவர் தங்கட்கு நாமமும் விளம்பி
          எல்லை யில்வளம் பெற்றிட அவுணருக் கியலுந்
               தொல்லை வேள்வியும் விரதமும் உணர்த்துதி தோகாய். ......    9

(இன்ன தன்மைகள் முடி)

இன்ன தன்மைகள் முடிந்தபின் நின்சிறார் எவரும்
     நன்ன லந்தனை அடையவும் நண்ணல ரெல்லாம்
          பன்ன ரும்பழி மூழ்கவும் அருந்தவம் பயில
               அன்னை மீளுதி என்றனன் புகரெனும் ஆசான். ......    10

(குரவன் வாய்மை)

குரவன் வாய்மையை வினவியே கோதில்சீர் அவுணர்
     மரபு மேம்படு தன்மையான் மற்றிவை யெல்லாம்
          அருளு கின்றனை ஆதலால் இப்பணி யடியேன்
               புரிகு வேனென அவனடி வணங்கியே போனாள். ......    11

(மயிலை அன்ன)

மயிலை அன்னவள் அவுணர்தம் மன்னற்கும் இனைய
     செயலை யோதியே அவன்விடை யுங்கொடு சென்று
          கயிலை என்னநீ றாடியே காசிபன் இருந்து
               பயிலும் நோன்புடை எல்லையை நாடியே படர்ந்தாள். ......    12

(திருவும் மாரவேள்)

திருவும் மாரவேள் இரதியுந் திலோத்தமை யென்ன
     மருவு தையலும் மோகினி யென்பதோர் மாதும்
          ஒருத னித்திரு வடிவுகொண் டாலென உலகில்
               பொருவில் மாயவள் பேரழ குருக்கொடு போனாள். ......    13

(மண்ணுற் றோர்)

மண்ணுற் றோர்களும் மாதிரத் தோர்களும் மதிதோய்
     விண்ணுற் றோர்களும் அன்னவள் எழில்நலம் விரைவில்
          கண்ணுற் றோர்கிலர் அணுகினர் காமவேள் கணையின்
               புண்ணுற் றோர்விளக் கழலுறு பறவையிற் புலர்ந்தார். ......    14

(மதியும் ஞாயிறு)

மதியும் ஞாயிறுஞ் சூழ்தரு மேருவின் வடபால்
     விதிம கன்தவம் புரிதரும் வியனிலை மருங்கின்
          அதிர்சி லம்பொடு மேகலை புலம்புற அனையாள்
               திதிகொல் என்றெலாத் தேவரும் ஐயுறச் சென்றாள். ......    15

(சென்ற மாயை)

சென்ற மாயைஅக் காசிபன் இருக்கையில் திருவாழ்
     மன்றல் வாவியுந் தடங்களுஞ் சோலையும் மணிசெய்
          குன்று மாமலர்ப் பள்ளியும் மண்டபக் குழாமுந்
               தன்றன் ஆணையால் துண்ணெனச் சூழ்தரச் சமைத்தாள். ......    16

(இனைத்தெ லாம)

இனைத்தெ லாமவண் வருதலும் எந்தைதன் னடியை
     மனத்தி னிற்கொடு பொறியினை உரத்தினால் வாட்டித்
          தனித்து நோற்றிடுங் காசிபன் புகுந்தஅத் தகைமை
               அனைத்தும் நோக்கியீ தென்கொலென் றதிசய மடைந்தான். ......    17

(முற்று மாங்கவை)

முற்று மாங்கவை ஆசையின் நெடிதுபன் முறையால்
     உற்று நாடியே மாயைதன் செயலென உணரான்
          இற்றெ லாமிவண் இயற்றினர் யாரென எண்ணிச்
               சுற்று நோக்கினன் யாரையுங் காண்கிலன் தூயோன். ......    18

வேறு

(மெய்த்தவ வுணர்)

மெய்த்தவ வுணர்ச்சியை விடுத்து மேலையோன்
     அத்தன தருளினால் அணங்கு மாயையால்
          வைத்தன கண்ணுறா மனங்கொள் காதலாற்
               சித்திர மெனவெரீஇ யினைய செப்புவான். ......    19

(வானநா டிழிந்த)

வானநா டிழிந்ததோ மகத்தின் வேந்துறை
     தானநா டிழிந்ததோ தனதன் ஆதியோர்
          ஏனைநா டிழிந்ததோ இதுவன் றேல்இவை
               ஆனவா றுணர்கிலேன் அழுங்கு சிந்தையேன். ......    20

(ஆரணன் செய்கை)

ஆரணன் செய்கையோ அகில முண்டுமிழ்
     நாரணன் செய்கையோ அவர்க்கு நாடொணாப்
          பூரணன் செய்கையோ பிறர்பு ரிந்ததோ
               காரணந் தேர்கிலேன் கவலும் நெஞ்சினேன். ......    21

(புன்னெறிக் கானி)

புன்னெறிக் கானிடைப் புகுந்த இத்திரு
     நன்னெறிக் கேதுவோ நலந்த விர்ந்திடுந்
          துன்னெறிக் கேதுவோ தொல்லை ஞாலமேல்
               எந்நெறிக் கேதுவென் றிதுவுந் தேர்கிலேன். ......    22

(என்றிவை சொற்றி)

என்றிவை சொற்றிவண் யாவ தாயினும்
     நன்றதன் இயற்கையும் நமக்கு முன்னரே
          ஒன்றறத் தெரிவுறும் உணர்ச்சி இங்ஙனஞ்
               சென்றது பழுதெனச் சிந்தித் தானரோ. ......    23

(தெற்றெனத் தன்மன)

தெற்றெனத் தன்மனந் தேற்றித் தொன்மைபோல்
     நற்றவம் இயற்றுவான் நணுகும் வேலையில்
          மற்றது தெரிந்திடு மாயை தூமணிப்
               பொற்றையில் தமியளாய்ப் பொலிந்து தோன்றினாள். ......    24

(தோன்றினள் நிற்ற)

தோன்றினள் நிற்றலுந் தொல்லை நான்முகற்
     கான்றதொர் காதலன் அவளை நோக்கினான்
          வான்றிகழ் கற்பக வல்லி செய்தவத்
               தீன்றதொர் கொடிஇவண் எய்திற் றோவென்றான். ......    25

(நாற்றலை யான்)

நாற்றலை யான்மகன் நம்முன் இக்கொடி
     தோற்றிய தற்புதச் சூழ்ச்சிக் கேதுவென்
          றாற்றுறு தவத்திறன் அகற்றி யாயிடை
               வீற்றிருந் திடுவது விடுத்துப் போயினான். ......    26

(கண்ணகல் வரை)

கண்ணகல் வரைமிசைக் கடிது போயுறீஇ
     அண்ணிய னாதலும் அரிவை யாய்உறப்
          பெண்ணுரு வேகொல்இப் பெற்றித் தாலென
               எண்ணினன் மையலுக் கெல்லை காண்கிலான். ......    27

(புண்டரி கத்திகொல்)

புண்டரி கத்திகொல் பொன்னம் பாவைகொல்
     அண்டர்தம் அணங்குகொல் என்னின் அன்னரைக்
          கண்டறி வேன்எனைக் காதல் பூட்டிய
               ஒண்டொடி இனையள்என் றுணர்கி லேனரோ. ......    28

(சேயிருங் கமலமே)

சேயிருங் கமலமேற் செம்மல் செய்கையால்
     ஆயவள் என்னில்இவ் வழகு பெற்றிடாள்
          ஏயது தேறினன் எல்லை இல்லதோர்
               மாயையே பெண்ணென வந்த வாறென்பான். ......    29

(புகன்றிவை பற்பல)

புகன்றிவை பற்பல பொருவில் நான்முகன்
     மகன்றன தருந்தவ வலியும் போதமும்
          அகன்றனன் புணர்ச்சிவேட் டழுங்கி நைவதோர்
               மகன்றிலின் பரிசென வருத்த மெய்தினான். ......    30

(உண்ணிகழ் ஊன்)

உண்ணிகழ் ஊன்பொருட் டுயிர்கொல் வேட்டுவர்
     கண்ணியுட் பட்டதோர் கலையின் மாழ்குவான்
          பெண்ணர சாயவிப் பேதைக் கென்கொலோ
               எண்ணமென் றிடருழந் திரங்கி ஏங்கினான். ......    31

(அதுபொழு தவுணரை)

அதுபொழு தவுணரை அளிக்க வந்திடுந்
     திதிநிகர் மடமகள் சிறந்த கண்களால்
          பொதுவியல் நோக்கொடு புணர்ச்சி நோக்கினைக்
               கதுமெனக் காட்டினள் முனிவன் காணுற. ......    32

(கண்டனன் முனிவரன்)

கண்டனன் முனிவரன் கலங்கி னான்பொதுக்
     கொண்டதோர் நோக்கியல் குறித்துக் கூடுதல்
          எண்டரு நோக்கினால் இவளை யெய்துமா
               றுண்டென நினைந்தனன் உவப்பின் உம்பரான். ......    33

(பெருந்துயர் உதவு)

பெருந்துயர் உதவுவெம் பிணியுந் தீர்ப்பதோர்
     மருந்துமற் றாதலும் மையல் மேதகும்
          அருந்தவ முனிவரன் அனைய மாதுதன்
               திருந்திய நோக்கியல் தெளிந்து செப்புவான். ......    34

(கற்பனை முதலிய கட - 2)

கற்பனை முதலிய கடந்த கண்ணுதற்
     சிற்பரன் யாவையுஞ் சிதைய ஈறுசெய்
          அற்புத மும்மவன் அருளும் போன்றதால்
               பொற்புறு கின்றஇப் பூவை நாட்டமே. ......    35

(மாயையுங் கொலை)

மாயையுங் கொலையுமே மருவி வைகலும்
     ஆயதோர் உலகினை அளிக்கும் நீர்மையாற்
          பாயிருந் திரைக்கடல் நடுவட் பள்ளிகொள்
               தூயனை நிகர்த்ததித் தோகை நோக்கமே. ......    36

(இயலிருள் மேனியால்)

இயலிருள் மேனியால் இடியின் ஆர்ப்பினால்
     வியனுயிர் முழுவதும் வெருவச் செய்துடன்
          பயனுறு தீம்புனல் பரிவின் ஈதரு
               புயலையும் நிகர்த்தன பூவை பார்வையே. ......    37

(என்பன பலபல எண்)

என்பன பலபல எண்ணி அன்னவள்
     தன்படி வத்துருத் தகைமை காணுறீஇ
          அன்பினில் வியந்துநின் றழுங்கு நெஞ்சொடு
               நன்பெரு நயப்பினால் நவிறல் மேயினான். ......    38

வேறு

(வானுறு புயலின்)

வானுறு புயலின் தோற்றம் வரம்பில்சீர்க் கங்குல் வண்ணம்
     ஏனைய கருமை யெல்லாம் இலக்கணத் தொருங்கே ஈண்டி
          மீனுறழ் தடங்க ணாள்பால் மேவிய என்ப தல்லால்
               நானமார் கூந்தற் கம்மா நாம்புகல் உவமை யாதோ. ......    39

(கோட்டுடைக் குழவி)

கோட்டுடைக் குழவித் திங்கள் குனிசிலை இரண்டு மானின்
     சூட்டுடை நுதற்கொவ் வாது தொலைந்துபோய்த் தொல்லை வான
          நாட்டிடைக் கரந்துந் தோன்ற நணுகியுந் திரியு மென்னின்
               மீட்டிதற் குரைக்க லாகும் உவமைகள் வேறு முண்டோ. ......    40

(அருவத்தில் திகழு)

அருவத்தில் திகழுங் காமன் ஆடலஞ் சிலையும் நெற்றி
     உருவத்துக் குடைந்து வான்புக் கொதுங்கிய மகவான் வில்லும்
          மருவத்தந் துரைத்தும் என்னின் மற்றவை யிரண்டும் மாதின்
               புருவத்தைப் போலா தம்மின் மீமிசைப் பொருந்து மன்றே. ......    41

(வண்ணமா வடுக்கோல்)

வண்ணமா வடுக்கோல் நீலம் வாளயில் கயல்சேல் என்றே
     எண்ணின அவற்றி லொன்றும் யாவது மியல்புற் றன்றாற்
          கண்ணிணைக் கிணையே தென்னிற் காமர்பாற் கடலுள் எங்கோன்
               உண்ணிய எழுநஞ் சென்னில் ஒருசிறி தொப்ப தம்மா. ......    42

(எள்ளென்றும் ஓத்தி)

எள்ளென்றும் ஓத்தி யென்றும் ஏர்கொள்சம் பகப்போ தென்றுந்
     தள்ளருங் குமிழ தென்றுஞ் சாற்றினர் அவைகள் நாடில்
          தெள்ளிது மன்று வேறு செப்பவோர் பொருளு மில்லை
               உள்ளதொன் றுரைக்க வேண்டுந் துண்டத்துக் குவமை தேரின். ......    43

(கெண்டையந் தடங்க)

கெண்டையந் தடங்கட் பாவை கேழ்கிளர் இதழ்க்கொப் புன்னில்
     தொண்டையங் கனியுண் டென்று சொல்வனேல் அதுவுந் துப்பால்
          உண்டிடும் விருப்பி னோருக் குலப்புறா அமிர்தம் நல்கிக்
               கொண்டிருந் திடினே ஒப்பாம் இல்லையேற் கூடா தன்றே. ......    44

(முகையுறு தளவும்)

முகையுறு தளவும் புள்ளின் முருந்தமுங் குருந்து முத்தும்
     அகையுறு முடுவுஞ் சாற்றின் அணியெயி றதற்கொவ் வாவால்
          நகையது தெரிந்தோர் வெஃக நன்நலம் புரியும் நீரால்
               நிகர்பிறி தில்லை திங்கள் நிலாவெனில் ஆகு மன்றே. ......    45

(மயிரெறி கருவி)

மயிரெறி கருவி வள்ளை தோரண மணிப்பொன் னூசல்
     பெயர்வன நிகர்க்கு மென்று பேசுதல் பேதை நீர்த்தாஞ்
          செயிரற வுலோக மாக்குந் திசைமுகக் கொல்லன் செய்த
               உயிரெறி கருவி போலும் ஒண்குழைக் காது மாதோ. ......    46

(கொங்குறு கூந்த லாள்)

கொங்குறு கூந்த லாள்தன் கோலவாள் முகத்துக் கொப்பாம்
     திங்களென் றுரைக்கில் தேயும் வளர்வுறுஞ் சிறப்ப தன்றால்
          பங்கய மெனினும் உண்டோர் பழுதுமற் றதற்கும் என்னில்
               அங்கதற் கதுவே யல்லால் அறையலாம் படிமற் றுண்டோ. ......    47

(சரந்தெறு விழியி)

சரந்தெறு விழியி னாள்தன் களத்தின தெழிலைச் சங்கங்
     கரந்தன கமுகும் அற்றே அன்னது கண்டு நேரா
          வரந்தரு புலவர் சொற்றார் மற்றவர் அதற்கோ நாளும்
               இரந்திடு தொழில ராகி இழுக்கமுற் றார்கள் அன்றே. ......    48

(மாயவன் அதர)

மாயவன் அதரஞ் சேர்த்தி வரன்முறை இசைத்த பச்சை
     வேயெனும் அதுவும் யான்செய் மெய்த்தவம் அனைய நீராள்
          தூயபொற் றோள்கண் டஞ்சித் தோற்றதால் என்னில் அன்னான்
               சேயவன் வணக்கா தேந்துஞ் சிலைகொலோ நிகர்ப்ப தம்மா. ......    49

(பூந்தள வனைய)

பூந்தள வனைய மூரற் பொற்கொடி கரத்துக் கொவ்வா
     காந்தளும் நறிய செய்ய கமலமா மலரும் என்னில்
          மாந்தளிர் பொருவ துண்டோ வள்ளுகிர் கிள்ளை நாசி
               ஏய்ந்தள வற்றுக் காமர் இலைச்சினை யாய தன்றே. ......    50

(பொருப்பென எழுந்து)

பொருப்பென எழுந்து வல்லின் பொற்பெனத் திரண்டு தென்னந்
     தருப்பயில் இளநீ ரென்னத் தண்ணெனா அமுதுட் கொண்டு
          மருப்பெனக் கூர்த்து மாரன் மகுடத்தில் வனப்பு மெய்தி
               இருப்பதோர் பொருளுண் டாமேல் இணைமுலைக் குவமை யாமே. ......    51

(அந்திரு வன்னாள்)

அந்திரு வன்னாள் மேனி அமைத்துவெம் முலைக்கண் செய்வான்
     சுந்தர வள்ளம் நீலுண் டுகிலிகை விதிகொள் போழ்திற்
          சிந்திய துள்ளி யொன்றின் ஒழுக்கங்கொல் சிறப்பின் மிக்க
               உந்தியின் மீது போய உரோமத்தின் ஒழுக்க மன்றே. ......    52

(மாசடை யாத நீல)

மாசடை யாத நீல மணியுறழ் வண்ண மாலோன்
     காசடை அகலந் தாங்குங் கனங்குழைத் திருவும் போற்றுந்
          தேசுடை மாதி னுந்திச் சீரினுக் கனையன் துஞ்சும்
               பாசடை நேர்வ தாமோ பகரினும் பழிய தன்றோ. ......    53

(கண்டுழி மாயும்)

கண்டுழி மாயும் அன்றே மின்னெனில் ககன மாகக்
     கொண்டிடின் உருவின் றாகுங் கொடியெனில் துடிய தென்னில்
          திண்டிறல் நாக மென்னில் சீரிதன் றணங்கின் நாப்பண்
               உண்டிலை யென்று மானும் உண்மைக்கோ ருவமை யுண்டோ. ......    54

(மயலுடைப் பணி)

மயலுடைப் பணியும் ஆல வட்டமும் வனப்புச் செய்த
     வியலுடைத் தேரும் அச்சுற் றிரங்கியே உயிர்க்கு மென்றாற்
          கயலுடைக் கண்ணாள் அல்குற் கொப்பவோ காமர் வீடவ்
               வியலுறுப் பென்பர் யாரும் மேலது காண்டும் அன்றே. ......    55

(கோழிலை அரம்பை)

கோழிலை அரம்பை யீனுங் குருமணித் தண்டை வேழத்
     தாழிருந் தடக்கை தன்னை நிகரெனில் தகுவ அன்றால்
          மாழையுண் கருங்கண் மாதின் மகரிகை வயங்கு பொற்பூண்
               சூழுறு கவானே போலும் அவையெனிற் சொல்ல லாமோ. ......    56

(அலவனாம் ஞெண்)

அலவனாம் ஞெண்டை அன்னாள் அணிகெழு முழந்தாட் கொப்பாப்
     புலவர்கள் புகலா நின்ற வழக்கலாற் பொருந்திற் றன்றால்
          திலகநன் மணியே போல்வாள் தெய்வத வடிவுக் கிந்த
               உலகினுள் இழிந்த தொன்றை உரைக்கினஃ துவமை யாமோ. ......    57

(தமனியத் தியன்ற)

தமனியத் தியன்ற பொற்பில் தாவிலா ஆவந் தானுஞ்
     சிமையநேர் கொங்கை மாதின் திகழ்கணைக் காலுந் தூக்கிற்
          சமமிது பொருளி தென்றே தமியனேன் றுணிந்து சிந்தை
               அமைவுற அறிதல் தேற்றேன் ஐயமுற் றிடுவன் யானே. ......    58

(அரும்புறு காலை)

அரும்புறு காலைக் கொங்கைக் கழிவுற்று முகமொவ் வாது
     சுரும்புற மலர்ந்த பின்னுந் தொலைந்துகை யினுக்குந் தோற்றுத்
          திரும்பவும் அடிக்கும் அஞ்சிச் சிதைந்தது கமல மென்றால்
               பெரும்பயம் உற்று நோற்றும் பிழைத்தது போலு மன்றே. ......    59

(மேக்குயர் கூனல்)

மேக்குயர் கூனல் ஆமை விரைசெறி குவளைத் தோடு
     தாக்குறு பந்து பிண்டித் தண்டளிர் சார்பு கூறில்
          தூக்குறு துலையின் தட்டுத் தொகுத்தொரு வடிவில் வேதா
               ஆக்குறின் மாதின் தாளுக் கதுநிக ராகும் போலும். ......    60

(ஆவியின் நொய்ய)

ஆவியின் நொய்ய பஞ்சும் அனிச்சமா மலரும் அன்னத்
     தூவியு மிதிக்கிற் சேந்து துளங்குறும் அடிகள் என்றால்
          நாவியங் குழலின் மாது நடந்திட ஞாலம் ஆங்கோர்
               பூவதோ அதுபூ அன்றேல் பொன்னடி பொருந்து மோதான். ......    61

(கயலுறழ் கருங்கட்)

கயலுறழ் கருங்கட் செவ்வாய்க் காரிகை தனது சாயல்
     மயிலெனக் கூறின் அல்லால் மற்றதற் குவமை யில்லை
          இயலுறு வடிவிற் கொப்ப தேதுள திவளே போலச்
               செயலுறுத் தெழுதிற் றுண்டேல் சித்திரம் அஃதே போலும். ......    62

(ஆனனம் நான்கு)

ஆனனம் நான்கு செய்தாட் காயிர மடங்கேர் கொண்ட
     மானினி தன்னை வேதா வகுத்திலன் கொல்லோ அன்னான்
          தானமைத் துளனே என்னில் தலைபல தாங்கி இந்தத்
               தூநிலா நகையி னாளைத் தொடர்ந்துபின் திரிவன் அன்றே. ......    63

(மையறு புவியில்)

மையறு புவியில் வந்த மாதிவள் அடியி லுள்ள
     துய்யதோர் குறிகள் வானில் தொல்பெருந் திருவில் வைகுஞ்
          செய்யவன் றனதுதேவி சிரத்தினும் இல்லை யென்றால்
               மெய்யுறு குறிகளெல்லாம் இனைத்தென விளம்பற் பாற்றோ. ......    64

வேறு

(என்று முன்னிஅவ்)

என்று முன்னிஅவ் வேந்திழை தன்முனஞ்
     சென்று காமர் திருவினுஞ் சீரியோய்
          நன்று நன்றுநின் நல்வர வேயெனா
               நின்று பின்னும் நெறிப்பட ஓதுவான். ......    65

(யாது நின்குலம்)

யாது நின்குலம் யாதுநின் வாழ்பதி
     யாது நின்பெயர் யாருனைத் தந்தவர்
          ஓது வாயென் றுரைத்தனன் உள்ளுறு
               காத லான்மிகு காசிபன் என்பவே. ......    66

(வனிதை கூறுவள்)

வனிதை கூறுவள் மாதவ நீயிது
     வினவி நிற்றல் விழுமிதன் றென்னிடைத்
          தனிய னாகியுஞ் சார்ந்தனை நோற்பவர்க்
               கினிய வேகொல் இனையதோர் நீர்மையே. ......    67

(ஏதில் நோன்பை)

ஏதில் நோன்பை இகந்துணர் வில்லதோர்
     பேதை மாந்தரில் பேசியெற் சார்வது
          நீதி யேயன்று நின்கடன் ஆற்றிடப்
               போதி யென்ன முனிவன் புகலுவான். ......    68

(மங்கை கேட்டி)

மங்கை கேட்டி வரம்பறு பற்பகல்
     அங்கம் வெம்ப அகமெலி வுற்றிடச்
          சங்கை யின்றித் தவம்பல செய்திடல்
               இங்கு வேண்டிய தெய்துதற் கேயன்றோ. ......    69

(பொன்னை வேண்டி)

பொன்னை வேண்டிக்கொ லோபொன்னின் மாநகர்
     தன்னை வேண்டிக்கொ லோசசி யாம்பெயர்
          மின்னை வேண்டியே அல்லது வேறுமற்
               றென்னை வேண்டிஅவ் விந்திரன் நோற்றதே. ......    70

(ஐதின் மேனி அல)

ஐதின் மேனி அலசுற யான்தவஞ்
     செய்த திங்குனைச் சேருதற் கித்திறம்
          நொய்தின் மேவினை நோற்றதற் குப்பயன்
               எய்தி யுற்ற தினித்தவம் வேண்டுமோ. ......    71

(பேரும் ஊரும்)

பேரும் ஊரும் பிறவும் வினவினேற்
     கோர வொன்றும் உரைத்திலை ஆயினுஞ்
          சேர வேபின் தெளிகுவன் காமநோய்
               ஈரு கின்ற திரங்குதி நீயென்றான். ......    72

(மாயை கேட்டு)

மாயை கேட்டு வறிது நகையளாய்
     நீயிவ் வாறு நெடுந்தவஞ் செய்ததும்
          ஆயில் என்பொருட் டோஅஃ தன்றரோ
               தூயை வஞ்சஞ் சொலன்முறை யோவென்றாள். ......    73

(மற்றிவ் வண்ண)

மற்றிவ் வண்ண மயில்புரை சாயலாள்
     சொற்ற காலை யனையவள் சூழ்ச்சியை
          முற்று மோர்ந்து முதிர்கலை யாவையுங்
               கற்று ணர்ந்திடு காசிபன் கூறுவான். ......    74

(பொய்ம்மை யாதும்)

பொய்ம்மை யாதும் புகல்கிலன் நான்முகன்
     செம்மல் யான்அது தேருதி போலுமால்
          இம்மை யேபர மீந்திடு வோய்இவண்
               மெய்ம்மை யேயுரைத் தேன்உள வேட்கையால். ......    75

(பன்னெ டுந்தவம்)

பன்னெ டுந்தவம் பற்பகல் ஆற்றியான்
     முன்னி நின்றது முத்திபெற் றுய்ந்திட
          அன்ன தேயெற் கருள்செய வந்தனை
               உன்னை மேவலன் றோஉயர் முத்தியே. ......    76

(ஈத லான்மற் றென)

ஈத லான்மற் றெனக்கொரு பேறிலை
     ஆத லாலுனை யேயடைந் தேனெனக்
          காதன் மாதும்அக் காசிபற் கண்ணுறீஇ
               ஓத லாம்பரி சொன்றை யுணர்த்துவாள். ......    77

வேறு

(மங்கலம் இயைந்தி)

மங்கலம் இயைந்திடு வடாதுபுல முள்ளேன்
     செங்கனக மேருவரை சேர்ந்ததொரு தென்பால்
          கங்கைநதி யின்கரை கலந்திட நினைந்தேன்
               அங்கணுறு கின்றதொ ரரும்பயன் விழைந்தே. ......    78

(வல்லையவண் ஏகு)

வல்லையவண் ஏகுறுவன் மாதவ வலத்தோய்
     நில்லிவண் எனப்பகர நீனிறம தாகுஞ்
          செல்லுறழு மேனிதரு செம்மல்அருள் மைந்தன்
               ஒல்லையிது கேண்மென உரைக்கலுறு கின்றான். ......    79

(கங்கைநதி யாதி)

கங்கைநதி யாதிய கவின்கொள்நதி யேழும்
     அங்கணுல கந்தனில் அரன்பதிகள் யாவும்
          மங்குல்தவழ் மேனியவன் வாழ்பதியு மற்றும்
               இங்குற வழைப்பனொ ரிமைப்பொழுது தன்னில். ......    80

(பொன்னுலகும் விஞ்சை)

பொன்னுலகும் விஞ்சையர்கள் போதுலகும் ஏனோர்
     மன்னுலகும் மாதிரவர் வாழுலகும் அங்கண்
          துன்னியதொர் தேவரொடு சூழ்திருவி னோடும்
               இன்னபொழு தேவிரைவின் ஈண்டுதர வல்லேன். ......    81

(மூவகைய தேவரை)

மூவகைய தேவரையும் முச்சகம துள்ளோர்
     யாவரையு நீதெரிய எண்ணுகினும் இங்ஙன்
          மேவரவி யற்றிடுவன் வெஃகல்புரி வாயேல்
               காவலுறு பேரமிர்த முங்கடிதின் ஈவேன். ......    82

(எப்பொருளை வேண்டி)

எப்பொருளை வேண்டினும் இமைப்பிலுன வாக
     அப்பொருளி யாவையும் அளிப்பன்அஃ தல்லால்
          மெய்ப்புதல்வர் வெஃகினும் விதிப்பன்அவர் தம்மை
               ஒப்பிலை இவர்க்கெனவும் உம்பரிடை உய்ப்பேன். ......    83

(அந்தமிகு மேனகை)

அந்தமிகு மேனகை அரம்பைமுத லானோர்
     வந்துனடி யேவல்செய வல்லைபுரி கிற்பேன்
          சிந்தைநனி மால்கொடு தியங்குமென தாவி
               உய்ந்திட நினைந்தருடி ஒல்லைதனில் என்றான். ......    84

வேறு

(முனியிது புகற லோடு)

முனியிது புகற லோடு முற்றிழை முறுவல் எய்தித்
     தனியினள் என்று கொல்லோ சாற்றினை இனைய நீர்மை
          இனியது தவிர்தி மேலோர்க் கிசையுமோ யானும் முன்னம்
               நினைவுழிச் செல்வல் நோற்று நீயிவண் இருத்தி என்றே. ......    85

(கங்கையின் திசையை)

கங்கையின் திசையை முன்னிக் கடிதவட் செல்வாள் என்ன
     அங்கவள் போத லோடும் அருந்தவன் தொடர்ந்து செல்ல
          மங்கையும் அருவ மெய்தி மாயையிற் கரந்து நிற்ப
               எங்கணும் நோக்கிக் காணான் இடருழந் திரங்கி நைவான். ......    86

ஆகத் திருவிருத்தம் - 1869



previous padalam   1 - மாயைப்படலம்   next padalammAyaip padalam

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]