Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   1 - உற்பத்தி காண்டம்   next kandam1 - uRpaththi kANdam

previous padalam   18 - விடைபெறு படலம்   next padalamvidaipeRu padalam

Ms Revathi Sankaran (4.33mb)




(எல்லை அன்னதின் மால)

எல்லை அன்னதின் மாலருள் கன்னியர் இருவர்
     சொல்ல ரும்பெரு வனப்பினர் சுந்தரி அமுத
          வல்லி என்றிடும் பெயரினர் கந்தவேள் வரைத்தோள்
               புல்லும் ஆசையால் சரவணத் தருந்தவம் புரிந்தார். ......    1

(என்னை யாளுடை)

என்னை யாளுடை மூவிரு முகத்தவன் இரண்டு
     கன்னி மாருமாய் ஒன்றிநோற் றிடுவது கருத்தில்
          உன்னி யேயெழீஇக் கந்தமால் வரையினை யொருவி
               அன்னை தோன்றிய இமகிரிச் சாரலை யடைந்தான். ......    2

(பொருவில் சீருடை)

பொருவில் சீருடை இமையமால் வரைக்கொரு புடையாஞ்
     சரவ ணந்தனிற் போதலுந் தவம்புரி மடவார்
          இருவ ரும்பெரி தஞ்சியே பணிந்துநின் றேத்த
               வரம ளிப்பதென் கூறுதிர் என்றனன் வள்ளல். ......    3

(மங்கை மார்தொழு)

மங்கை மார்தொழு தெம்மைநீ வதுவையால் மருவ
     இங்கி யாந்தவம் புரிந்தனங் கருணைசெய் யென்ன
          அங்கவ் வாசகங் கேட்டலும் ஆறுமா முகத்துத்
               துங்க நாயகன் அவர்தமை நோக்கியே சொல்வான். ......    4

(முந்தும் இன்னமு)

முந்தும் இன்னமு தக்கொடி மூவுல கேத்தும்
     இந்தி ரன்மக ளாகியே வளர்ந்தனை இருத்தி
          சுந்த ரிப்பெயர் இளையவள் தொல்புவி தன்னில்
               அந்தண் மாமுனி புதல்வியாய் வேடர்பால் அமர்தி. ......    5

(நன்று நீவிர்கள்)

நன்று நீவிர்கள் வளர்ந்திடு காலையாம் நண்ணி
     மன்றல் நீர்மையால் உங்களை மேவுதும் மனத்தில்
          ஒன்றும் எண்ணலீர் செல்லுமென் றெம்பிரான் உரைப்ப
               நின்ற கன்னியர் கைதொழு தேகினர் நெறியால். ......    6

(ஏகு மெல்லையில்)

ஏகு மெல்லையில் அமுதமா மென்கொடி யென்பாள்
     பாக சாதனன் முன்னமோர் குழவியாய்ப் படர்ந்து
          மாக மன்னநின் னுடன்வரும் உபேந்திரன் மகள்யான்
               ஆகை யால்எனைப் போற்றுதி தந்தையென் றடைந்தாள். ......    7

(பொன்னின் மேரு)

பொன்னின் மேருவில் இருந்தவன் புதல்வியை நோக்கி
     என்னை யீன்றயாய் இங்ஙனம் வருகென இசைத்துத்
          தன்ன தாகிய தனிப்பெருங் களிற்றினைத் தனது
               முன்ன ராகவே விளித்தனன் இத்திறம் மொழிவான். ......    8

(இந்த மங்கைநந் திரு)

இந்த மங்கைநந் திருமக ளாகுமீங் கிவளைப்
     புந்தி யன்பொடு போற்றுதி இனையவள் பொருட்டால்
          அந்த மில்சிறப் பெய்துமே லென்றலும் அவளைக்
               கந்த மேற்கொடு நன்றெனப் போயது களிறு. ......    9

(கொவ்வை போலி)

கொவ்வை போலிதழ்க் கன்னியை மனோவதி கொடுபோய்
     அவ்வி யானையே போற்றிய தனையகா ரணத்தால்
          தெய்வ யானைஎன் றொருபெயர் எய்தியே சிறிது
               நொவ்வு றாதுவீற் றிருந்தனள் குமரனை நுவன்றே. ......    10

(பெருமை கொண்டிடு)

பெருமை கொண்டிடு தெண்டிரைப் பாற்கடல் பெற்றுத்
     திரும டந்தையை அன்புடன் வளர்த்திடும் திறம்போல்
          பொருவில் சீருடைஅடல் அயிராவதம் போற்ற
               வரிசை தன்னுடன் இருந்தனள் தெய்வத மடந்தை. ......    11

(முற்று ணர்ந்திடு)

முற்று ணர்ந்திடு சுந்தரி யென்பவள் முருகன்
     சொற்ற தன்மையை உளங்கொடு தொண்டைநன் னாட்டில்
          உற்ற வள்ளியஞ் சிலம்பினை நோக்கியாங் குறையும்
               நற்ற வச்சிவ முனிமக ளாகவே நடந்தாள். ......    12

(இந்த வண்ணம்இவ் விரு)

இந்த வண்ணம்இவ் விருவர்க்கும் வரந்தனை ஈந்து
     கந்த மால்வரை யேகியே கருணையோ டிருந்தான்
          தந்தை யில்லதோர் தலைவனைத் தாதையாய்ப் பெற்று
               முந்து பற்பகல் உலகெலாம் படைத்ததோர் முதல்வன். ......    13

வேறு

(இத்திறஞ் சில)

இத்திறஞ் சிலபக லிருந்து பன்னிரு
     கைத்தல முடையவன் கயிலை மேலுறை
          அத்தனொ டன்னைதன் னடிப ணிந்திடச்
               சித்தம துன்னினன் அருளின் செய்கையால். ......    14

(எள்ளருந் தவிசி)

எள்ளருந் தவிசினின் றிழிந்து வீரராய்
     உள்ளுறும் பரிசனர் ஒருங்கு சென்றிடக்
          கொள்ளையஞ் சாரதர் குழாமும் பாற்பட
               வள்ளலங் கொருவியே வல்லை யேகினான். ......    15

(ஏயென வெள்ளி)

ஏயென வெள்ளிவெற் பெய்தி யாங்ஙனங்
     கோயிலின் அவைக்களங் குறுகிக் கந்தவேள்
          தாயொடு தந்தையைத் தாழ்ந்து போற்றியே
               ஆயவர் நடுவுற அருளின் வைகினான். ......    16

(அண்ணலங் குமரவேள்)

அண்ணலங் குமரவேள் அங்கண் வைகலும்
     விண்ணவர் மகபதி மேலை நாண்முதல்
          உண்ணிகழ் தங்குறை யுரைத்து நான்முகன்
               கண்ணனை முன்கொடு கயிலை யெய்தினார். ......    17

(அடைதரும் அவர்)

அடைதரும் அவர்தமை அமலன் ஆலயம்
     நடைமுறை போற்றிடும் நந்தி நின்மெனத்
          தடைவினை புரிதலுந் தளர்ந்து பற்பகல்
               நெடிதுறு துயரொடு நிற்றல் மேயினார். ......    18

(அளவறு பற்பகல்)

அளவறு பற்பகல் அங்கண் நின்றுளார்
     வளனுறு சிலாதனன் மதலை முன்புதம்
          உளமலி இன்னலை யுரைத்துப் போற்றலுந்
               தளர்வினி விடுமின்என் றிதனைச் சாற்றினான். ......    19

(தங்குறை நெடும்)

தங்குறை நெடும்புனற் சடில மேன்மதி
     யங்குறை வைத்திடும் ஆதி முன்புபோய்
          நுங்குறை புகன்றவன் நொய்தின் உய்ப்பனால்
               இங்குறை வீரென இயம்பிப் போயினான். ......    20

(போயினன் நந்தியம்)

போயினன் நந்தியம் புனிதன் கண்ணுதற்
     றூயனை வணங்கினன் தொழுது வாசவன்
          மாயவன் நான்முகன் வானு ளோரெலாங்
               கோயிலின் முதற்கடை குறுகினா ரென்றான். ......    21

(அருளுடை யெம்)

அருளுடை யெம்பிரான் அனையர் யாரையுந்
     தருதிநம் முன்னரே சார வென்றலும்
          விரைவொடு மீண்டனன் மேலை யோர்களை
               வருகென அருளினன் மாசில் காட்சியான். ......    22

(விடைமுகன் உரை)

விடைமுகன் உரைத்தசொல் வினவி யாவருங்
     கடிதினி லேகியே கருணை வாரிதி
          அடிமுறை வணங்கினர் அதற்குள் வாசவன்
               இடருறு மனத்தினன் இனைய கூறுவான். ......    23

(பரிந்துல கருள்புரி)

பரிந்துல கருள்புரி பரையொ டொன்றியே
     இருந்தருள் முதல்வகேள் எண்ணி லாஉகம்
          அருந்திறற் சூர்முதல் அவுணர் தங்களால்
               வருந்தின மொடுங்கினம் வன்மை இன்றியே. ......    24

(அந்தமில் அழகுடை)

அந்தமில் அழகுடை அரம்பை மாதரும்
     மைந்தனும் அளப்பிலா வானு ளோர்களும்
          வெந்தொழில் அவுணர்கள் வேந்தன் மேவிய
               சிந்துவின் நகரிடைச் சிறைக்கண் வைகினார். ......    25

(இழிந்திடும் அவுண)

இழிந்திடும் அவுணரா லியாதொர் காலமும்
     ஒழிந்திட லின்றியே உறைந்த சீரொடும்
          அழிந்ததென் கடிநகர் அதனை யானிவண்
               மொழிந்திடல் வேண்டுமோ உணர்தி முற்றுநீ. ......    26

(முன்னுற யான்தவம்)

முன்னுற யான்தவம் முயன்று செய்துழித்
     துன்னினை நங்கணோர் தோன்ற லெய்துவான்
          அன்னவ னைக்கொடே அவுணர்ச் செற்றுநும்
               இன்னலை யகற்றுதும் என்றி எந்தைநீ. ......    27

(அப்படிக் குமரனும்)

அப்படிக் குமரனும் அவத ரித்துளன்
     இப்பகல் காறுமெம் மின்னல் தீர்த்திலை
          முப்புவ னந்தொழு முதல்வ தீயரேந்
               துப்புறு பவப்பயன் தொலைந்த தில்லையோ. ......    28

(சூருடை வன்மை)

சூருடை வன்மையைத் தொலைக்கத் தக்கதோர்
     பேருடை யாரிலை பின்னை யானினி
          யாரொடு கூறுவன் ஆரை நோகுவன்
               நீருடை முடியினோய் நினது முன்னலால். ......    29

(சீகர மறிகடற்)

சீகர மறிகடற் சென்று நவ்விசேர்
     காகம தென்னஉன் கயிலை யன்றியே
          ஏகவோர் இடமிலை எமக்கு நீயலால்
               சோகம தகற்றிடுந் துணைவர் இல்லையே. ......    30

(ஏற்றெழு வன்னி)

ஏற்றெழு வன்னிமேல் இனிது துஞ்சலாந்
     தோற்றிய வெவ்விட மெனினுந் துய்க்கலாம்
          மாற்றலர் அலைத்திட வந்த வெந்துயர்
               ஆற்றரி தாற்றரி தலம்இப் புன்மையே. ......    31

(தீதினை யகற்ற)

தீதினை யகற்றவுந் திருவை நல்கவுந்
     தாதையர் அல்லது தனயர்க் காருளர்
          ஆதலின் எமையினி அளித்தி யாலென
               ஓதினன் வணங்கினன் உம்பர் வேந்தனே. ......    32

(அப்பொழு தரிய)

அப்பொழு தரியயன் ஐய வெய்யசூர்
     துப்புடன் உலகுயிர்த் தொகையை வாட்டுதல்
          செப்பரி தின்னினிச் சிறிதுந் தாழ்க்கலை
               இப்பொழு தருள்கென இயம்பி வேண்டினார். ......    33

(இகபரம் உதவுவோன்)

இகபரம் உதவுவோன் இவற்றைக் கேட்டலும்
     மிகவருள் எய்தியே விடுமின் நீர்இனி
          அகமெலி வுறலென அருளி ஆங்கமர்
               குகன்முகம் நோக்கியே இனைய கூறுவான். ......    34

வேறு

(பாரினை யலைத்து)

பாரினை யலைத்துப் பல்லுயிர் தமக்கும் பருவரல் செய்துவிண் ணவர்தம்
     ஊரினை முருக்கித் தீமையே இயற்றி யுலப்புறா வன்மை கொண் டுற்ற
          சூரனை யவுணர் குழுவொடுந் தடிந்து சுருதியின் நெறி நிறீஇ மகவான்
               பேரர சளித்துச் சுரர்துயர் அகற்றிப் பெயர்தியென் றனன்எந்தை பெருமான். ......    35

(அருத்திகொள் குமர)

அருத்திகொள் குமரன் இனையசொல் வினவி அப்பணி புரிகுவ னென்னப்
     புரத்தினை யட்ட கண்ணுதல் பின்னர்ப் பொள்ளென உள்ளமேற் பதினோர்
          உருத்திரர் தமையும் உன்னலும் அன்னோர் உற்றிட இவன்கையிற் படையாய்
               இருத்திரென் றவரைப் பலபடை யாக்கி ஈந்தனன் எம்பிரான் கரத்தில். ......    36

(பொன்றிகழ் சடில)

பொன்றிகழ் சடிலத் தண்ணல்தன் பெயரும் பொருவிலா உருவமுந் தொன்னாள்
     நன்றுபெற் றுடைய உருத்திர கணத்தோர் நவிலருந் தோமரங் கொடிவாள்
          வன்றிறற் குலிசம் பகழியங் குசமும் மணிமலர்ப் பங்கயந் தண்டம்
               வென்றிவின் மழுவு மாகிவீற் றிருந்தார் விறல்மிகும் அறுமுகன் கரத்தில். ......    37

(ஆயதற் பின்னர்)

ஆயதற் பின்னர் ஏவில்மூ தண்டத் தைம்பெரும் பூதமும் அடுவ
     தேயபல் லுயிரும் ஒருதலை முடிப்ப தேவர்மேல் விடுக்கினும் அவர்தம்
          மாயிருந் திறலும் வரங்களுஞ் சிந்தி மன்னுயிர் உண்பதெப் படைக்கும்
               நாயக மாவ தொருதனிச் சுடர்வேல் நல்கியே மதலைகைக் கொடுத்தான். ......    38

(அன்னதற் பின்னர் எம்பி)

அன்னதற் பின்னர் எம்பிரான் றன்பா லாகிநின் றேவின புரிந்து
     மன்னிய இலக்கத் தொன்பது வகைத்தா மைந்தரை நோக்கியே எவர்க்கும்
          முன்னவ னாம்இக் குமரனோ டேகி முடிக்குதிர் அவுணரை யென்னாத்
               துன்னுபல் படையும் உதவியே சேய்க்குத் துணைப்படை யாகவே கொடுத்தான். ......    39

(நாயகன் அதற்பின்)

நாயகன் அதற்பின் அண்டவா பரணன் நந்தியுக் கிரனொடு சண்டன்
     காயெரி விழியன் சிங்கனே முதலாங் கணப்பெருந் தலைவரை நோக்கி
          ஆயிர விரட்டி பூதவெள் ளத்தோ டறுமுகன் சேனையாய்ச் சென்மின்
               நீயிரென் றருளி அவர்தமைக் குகற்கு நெடும்படைத் தலைவரா அளித்தான். ......    40

(ஐம்பெரும் பூத)

ஐம்பெரும் பூத வன்மையும் அங்கண் அமர்தரும் பொருள்களின் வலியுஞ்
     செம்பது மத்தோ னாதியாம் அமரர் திண்மையுங் கொண்டதோர் செழுந்தேர்
          வெம்பரி இலக்கம் பூண்டது மனத்தின் விரைந்து முன் செல்வதொன் றதனை
               எம்பெரு முதல்வன் சிந்தையா லுதவி யேறுவான் மைந்தனுக் களித்தான். ......    41

(இவ்வகை யெல்லாம்)

இவ்வகை யெல்லாம் விரைவுடன் உதவி யேகுதி நீயெனக் குமரன்
     மைவிழி உமையோ டிறைவனைத் தொழுது வலங்கொடே மும்முறை வணங்கிச்
          செவ்விதின் எழுந்து புகழ்ந்தனன் நிற்பத் திருவுளத் துவகையால் தழுவிக்
               கைவரு கவானுய்த் துச்சிமேல் உயிர்த்துக் கருணைசெய் தமலைகைக் கொடுத்தான். ......    42

(கொடுத்தலும் வயின்)

கொடுத்தலும் வயின்வைத் தருளினாற் புல்லிக் குமரவேள் சென்னிமோந் துன்பால்
     அடுத்திடும் இலக்கத் தொன்பது வகையோர் அனிகமாய்ச் சூழ்ந்திடப் போந்து
          கடக்கரும் ஆற்றல் அவுணர்தங் கிளையைக் காதியிக் கடவுளர் குறையை
               முடித்தனை வருதி என்றருள் புரிந்தாள் மூவிரு சமயத்தின் முதல்வி. ......    43

(அம்மையித் திற)

அம்மையித் திறத்தால் அருள்புரிந் திடலும் அறுமுகன் தொழுதெழீஇ யனையோர்
     தம்விடை கொண்டு படர்ந்தனன் தானைத் தலைவராம் இலக்கமே லொன்பான்
          மெய்ம்மைகொள் வீரர்யாவருங் கணங்கள் வியன்பெருந் தலைவரும் இருவர்
               செம்மல ரடிகள் மும்முறை இறைஞ்சிச் சேரவே விடைகொடு சென்றார். ......    44

(நின்றிடும் அயன்மால்)

நின்றிடும் அயன்மால் மகபதி எந்தாய் நீயெமை அளித்தனை நெஞ்சத்
     தொன்றொரு குறையும் இல்லையால் இந்நாள் உய்ந்தனம் உய்ந்தன மென்று
          பொன்றிகழ் மேனி உமையுடன் இறைவன் பொன்னடி பணிந்தெழ நுமக்கு
               நன்றிசெய் குமரன் தன்னுடன் நீரும் நடமெனா விடையது புரிந்தான். ......    45

ஆகத் திருவிருத்தம் - 1310



previous padalam   18 - விடைபெறு படலம்   next padalamvidaipeRu padalam

previous kandam   1 - உற்பத்தி காண்டம்   next kandam1 - uRpaththi kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]