Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

 முதல் காண்டத்திற்கு   next kandam

previous padalam   2 - கடவுள் வாழ்த்து   next padalamkadvuL vAzhththu

Ms Revathi Sankaran (2.60mb)




சிவபெருமான்

(திருவந்த தொல்லை)

திருவந்த தொல்லைப் புவனத்தொடு தேவர் போற்றிப்
     பெருவந் தனைசெய் தறிதற்கரும் பெற்றி யெய்தி
          அருவந் தனையு முருவத்தையு மன்றி நின்றான்
               ஒருவன் றனது பதந்தன்னை யுளத்துள் வைப்பாம். ......    1

(ஊனாகி யூனு)

ஊனாகி யூனு ளுயிராயுயிர் தோறு மாகி
     வானாதி யான பொருளாய்மதி யாகி வெய்யோன்
          தானாகி யாண்பெண் ணுருவாகிச் சராச ரங்கள்
               ஆனான் சிவன்மற் றவனீள்கழற் கன்பு செய்வாம். ......    2

வேறு

(பிறப்பது மிறப்பதும்)

பிறப்பது மிறப்பதும் பெயருஞ் செய்கையும்
     மறப்பது நினைப்பதும் வடிவம் யாவையுந்
          துறப்பது மின்மையும் பிறவுஞ் சூழ்கலாச்
               சிறப்புடை யரனடி சென்னி சேர்த்துவாம். ......    3

(பூமலர் மிசைவரு)

பூமலர் மிசைவரு புனித னாதியோர்
     தாமுணர் வரியதோர் தலைமை யெய்தியே
          மாமறை முதற்கொரு வடிவ மாகியோன்
               காமரு செய்யபூங் கழல்கள் போற்றுவாம். ......    4

(பங்கயன் முகுந்தனாம்)

பங்கயன் முகுந்தனாம் பரமென் றுன்னியே
     தங்களி லிருவருஞ் சமர்செய் துற்றுழி
          அங்கவர் வெருவர வங்கி யாயெழு
               புங்கவன் மலரடி போற்றி செய்குவாம். ......    5

(காண்பவன் முதலிய)

காண்பவன் முதலிய திறமுங் காட்டுவான்
     மாண்புடை யோனுமாய் வலிகொள் வான்றொடர்
          பூண்பதின் றாய்நயம் புணர்க்கும் புங்கவன்
               சேண்பொலி திருநடச் செயலை யேத்துவாம். ......    6

சிவசத்தி

(செறிதரு முயிர்தொறு)

செறிதரு முயிர்தொறுந் திகழ்ந்து மன்னிய
     மறுவறு மரனிட மரபின் மேவியே
          அறுவகை நெறிகளும் பிறவு மாக்கிய
               இறைவிதன் மலரடி யிறைஞ்சி யேத்துவாம். ......    7

விநாயகக் கடவுள்

(மண்ணுலகத்தினிற்)

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
     எண்ணிய பொருளெலா மெளிதின் முற்றுறக்
          கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப்
               பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம். ......    8

வைரவக் கடவுள்

(பரமனை மதித்திடா)

பரமனை மதித்திடாப் பங்க யாசனன்
     ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர்
          குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன்
               புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம். ......    9

(வெஞ்சினப் பரியழன்)

வெஞ்சினப் பரியழன் மீது போர்த்திடும்
     அஞ்சனப் புகையென வால மாமெனச்
          செஞ்சுடர்ப் படிவமேற் செறித்த மாமணிக்
               கஞ்சுகக் கடவுள்பொற் கழல்க ளேத்துவாம். ......    10

வீரபத்திரக் கடவுள்

(அடைந்தவி யுண்டிடு)

அடைந்தவி யுண்டிடு மமரர் யாவரும்
     முடிந்திட வெருவியே முனிவர் வேதியர்
          உடைந்திட மாமக மொடியத் தக்கனைத்
               தடிந்திடு சேவகன் சரணம் போற்றுவாம். ......    11

சுப்பிரமணியக் கடவுள்

(இருப்பரங்குறை)

இருப்பரங் குறைத்திடு மெஃக வேலுடைப்
     பொருப்பரங் குணர்வுறப் புதல்வி தன்மிசை
          விருப்பரங் கமரிடை விளங்கக் காட்டிய
               திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவாம். ......    12

(சூரலை வாயிடை)

சூரலை வாயிடைத் தொலைத்து மார்புகீண்
     டீரலை வாயிடு மெஃக மேந்தியே
          வேரலை வாய்தரு வெள்ளி வெற்பொரீ இச்
               சீரலை வாய்வரு சேயைப் போற்றுவாம். ......    13

(காவினன் குடிலுறு)

காவினன் குடிலுறு காமர் பொன்னகர்
     மேவினன் குடிவர விளியச் சூர்முதல்
          பூவினன் குடிலையம் பொருட்கு மாலுற
               ஆவினன் குடிவரு மமலற் போற்றுவாம். ......    14

(நீரகத் தேதனை)

நீரகத் தேதனை நினையு மன்பினோர்
     பேரகத் தலமரும் பிறவி நீத்திடுந்
          தாரகத் துருவமாந் தலைமை யெய்திய
               ஏரகத் தறுமுக னடிக ளேத்துவாம். ......    15

(ஒன்றுதொ றாடலை)

ஒன்றுதொ றாடலை யொருவி யாவிமெய்
     துன்றுதொ றாடலைத் தொடங்கி ஐவகை
          மன்றுதொ றாடிய வள்ளல் காமுறக்
               குன்றுதொ றாடிய குமரற் போற்றுவாம். ......    16

(எழமுதிரைப் புனத்)

எழமுதி ரைப்புனத் திறைவி முன்புதன்
     கிழமுதி ரிளநலங் கிடைப்ப முன்னவன்
          மழமுதிர் களிறென வருதல் வேண்டிய
               பழமுதிர் சோலையம் பகவற் போற்றுவாம். ......    17

(ஈறுசேர் பொழுதினு)

ஈறுசேர் பொழுதினு மிறுதி யின்றியே
     மாறிலா திருந்திடும் வளங்கொள் காஞ்சியிற்
          கூறுசீர் புனைதரு குமர கோட்டம்வாழ்
               ஆறுமா முகப்பிரா னடிகள் போற்றுவாம். ......    18

திருநந்திதேவர்

(ஐயிருபுராண)

ஐயிரு புராணநூ லமலற் கோதியுஞ்
     செய்யபன் மறைகளுந் தெரிந்து மாயையான்
          மெய்யறு சூள்புகல் வியாத னீட்டிய
               கையடு நந்திதன் கழல்கள் போற்றுவாம். ......    19

திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள்

(பண்டை வல்வினை)

பண்டைவல் வினையினாற் பாயு டுத்துழல்
     குண்டரை வென்றுமுன் கூடல் வைகியே
          வெண்டிரு நீற்றொளி விளங்கச் செய்திடு
               தண்டமிழ் விரகன்மெய்த் தாள்கள் போற்றுவாம். ......    20

திருநாவுக்கரசு சுவாமிகள்

(பொய்யுரை நூல்)

பொய்யுரை நூல்சில புகலுந் தீயமண்
     கையர்கள் பிணித்துமுன் கடல கத்திடு
          வெய்யகற் றோணியாய் மிதப்ப மேற்படு
               துய்யசொல் லரசர்தா டொழுது போற்றுவாம். ......    21

சுந்தரமூர்த்தி சுவாமிகள்

(வறந்திடு பொய்கை)

வறந்திடு பொய்கைமுன் னிரம்ப மற்றவண்
     உறைந்திடு முதலைவந் துதிப்ப வன்னதால்
          இறந்திடு மகன்வளர்ந் தெய்தப் பாடலொன்
               றறைந்திடு சுந்தர னடிகள் போற்றுவாம். ......    22

மாணிக்கவாசக சுவாமிகள்

(கந்தமொடுயிர்படு)

கந்தமொ டுயிர்படுங் கணபங் கம்மெனச்
     சிந்தைகொள் சாக்கியர் தியங்க மூகராய்
          முந்தொரு மூகையை மொழிவித் தெந்தைபால்
               வந்திடு மடிகளை வணக்கஞ் செய்குவாம். ......    23

திருத்தொண்டர்கள்

(அண்டரும் நான்முக)

அண்டரு நான்முகத் தயனும் யாவருங்
     கண்டிட வரியதோர் காட்சிக் கண்ணவாய்
          எண்டகு சிவனடி யெய்தி வாழ்திருத்
               தொண்டர்தம் பதமலர் தொழுது போற்றுவாம். ......    24

சரசுவதி

(தாவறு முலகெலா)

தாவறு முலகெலாந் தந்த நான்முகத்
     தேவுதன் றுணைவியாய்ச் செறிந்த பல்லுயிர்
          நாவுதொ றிருந்திடு நலங்கொள் வாணிதன்
               பூவடி முடிமிசைப் புனைந்து போற்றுவாம். ......    25

ஆகத் திருவிருத்தம் - 30



previous padalam   2 - கடவுள் வாழ்த்து   next padalamkadvuL vAzhththu

 முதல் காண்டத்திற்கு   next kandam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]