| ஆலயத்தைப் பற்றி About the temple
ஆலய வரலாறு
எண்ணியது ஈடேறும் புண்ணிய மலையாம் மலக்கா சன்னியாசி மலைக்கு ஏறக்குறைய 120 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து ஒரு சாமியார் வந்து ஒர் இடத்தில் சிறு குடிசை கட்டி அதில் தங்கியிருந்து ஒரு சிவலிங்க உருவத்தை வைத்து வழிபட்டு வந்தார். அவர் தமது நேரத்தை சிவத் தியானம் செய்வதிலேயே கழித்து வழிபட்டு வந்தாராம். சிவலிங்க வழிபாட்டை அவர் தொடங்கிய காலத்திலேயே அவருக்கு மலாக்கா தனவணிகர்கள் சமூகத்தைச் சேர்ந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் தொடர்பு ஏற்பட்டது. காலப் போக்கில் அந்த சாமியாருக்கு வயதாகிவிட்டதால் அவரது சிவலிங்க வழிபாடுப் பொறுப்பை மலாக்கா நாட்டுக்கோட்டைச் செட்டியார்களிடமே ஒப்படைத்தாரம். அதன்பின்பு சிறிது காலத்தில் அந்த சாமியார் அதே இடத்தில் சமாதியானார்.
சாமியாரிடம் சன்னியாசி மலைச் சிவலிங்க வழிபாட்டைத் தாம் நடத்துவதாக ஒப்புக்கொண்ட நாட்டுக்கோட்டை நாகரத்தார்கள் சிறிது காலத்தில் சிவலிங்க வழிபாட்டை முருகக் கடவுளாக மாற்றிக்கொண்டு அது முதல் அங்கு முருகப் பெருமான் சிலையை நிறுவி ஆலயத்தைப் பெரிதாகக் கட்டி சிறப்பாக வழிபாடு செய்து வருகிறார்கள்.
இந்த ஆலயத்து மூலவரான திருமுருகப் பெருமானுக்கு நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது மாசிமகத் திருவிழாவாகும். அதற்கு மலேசியா, சிங்கப்பூரிலிருந்து வரும் இறையன்பர்கள் ஏறத்தாழ ஐயாயிரம் பேர் கூடுவார்களாம். திருமுருகன் திருக்கோயிலிருந்து அவனது அருள்மிகு அயில் வேல் மலாக்கா நகரத்தில் உள்ள அருள்மிகு பொய்யாத விநாயகர் கோயிலுக்கு எடுத்துச் சென்று அதை அருள்மிகு முருகக்கடவுளாக எழுந்தருளச் செய்து அது அன்று மாலை சன்னியாசி மலைக்கு வந்து சேருமாம். மறுநாள் காலை வழக்கம்போல் திருமுருகனுக்கு திருமுழுக்குகளும் வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற்று, வருகை தந்தோர் அனைவருக்கும் அன்னக்கொடை என்ற பகலுணவு வழங்கப்பெறுமாம். மற்ற முருகன் கோயில்களைப் போல மாசிமகத்தன்று மலாக்கா முருகன் கோயிலுக்கு ஏறத்தாழ 500 காவடிகள் வருமாம்.
பொய்யாத விநாயகர் ஆலயம்
மலாக்கா பொய்யாத விநாயகர் ஆலயம் உண்மையிலேயே "மலாக்கா செட்டி" சமூகத்தைச் சார்ந்தது. அவர்களால் அந்த ஆலயத்தை சிறப்பாகக் கொண்டு நடத்த முடியாததால் அதன் பொறுப்பை மலாக்கா நாட்டுக்கோட்டைச் செட்டியார்களிடம் அவர்கள் ஒப்படைத்தார்கள். ஆக சன்னியாசி ஆலயமும், நகரத்தில் உள்ள பொய்யாத விநாயகர் ஆலயமும் இன்று மலாக்கா நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் சமூகத்தின் அறங்காவலர்களால் பராமரிக்கப் பட்டுவருகின்றன. பொய்யாத விநாயகர் ஆலயத்தில் வெள்ளி இரதம் இருக்கிறது. தங்கத்தால் வார்த்த திருமுருகப் பெருமான் திருவுலாச் சிலையை அந்த வெள்ளி இரதத்தில் வைத்து அழகு செய்து அங்கிருந்து திருவுலா என்னும் ஊர்வலமாக வருகை தந்து மாசிமகத்திற்கு முதல் நாள் பிற்பகல் மூன்று மணிக்கெல்லாம் சன்னியாசி மலைக்கு வந்து சேர்ந்துவிடும்.
மாசிமகத்தன்று முதல் நாள் இரவு 1500 பேர்களுக்கும் மறுநாள் 5000 பேர்களுக்கும் சோற்றுக் கொடை என்ற அன்னதானம் வழங்கப்பெறும். இதில் திரு. வெங்கா அவர்கள் தலைமையில் சுமார் 120 தொண்டர்கள் மலாக்காவிலிருந்து வந்து சிறப்பான முறையில் ஒரு கட்டுக்கோப்பாக உணவு பரிமாறி சிறந்த பொதுத்தொண்டு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று மாலை மேற்படி தொண்டர்களுக்குத் தலா ஒரு தேங்காய்க் காளாஞ்சி வழங்கிப் பொறுப்பாளர்களால் மரியாதை செய்யப்பெறுகிறது.
ஒரு காலத்தில் அதிகமான செட்டியார்கள் கிட்டங்கிகள் இருந்த மலாக்காவில் இப்போது 6 கிட்டங்கிகளாகக் குறைந்துள்ளன. ஆண்டு தோறும் 6 கிட்டங்கிகளில் உள்ள 30 பேரும் ஒன்று கூடி சீட்டுப் போடு ஒவ்வொரு கிட்டங்கியாக முறைப்படுத்தி யார் பெயர் வருகிறதோ அவர்களே ஆலயப் பொறுப்பை ஏற்று நடத்துவார்கள். இப்படியே 6 கிட்டங்கிகளின் முறை முடிந்ததும் மறுபடியும் மேற்படி சீட்டு முறையில் தேர்வு செய்வார்கள்.
மாசிமகத் திருவிழாவுக்கான எந்த வசூலும் நடைபெறுவதில்லை. அந்த விழாவுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் வெள்ளி செலவாகும். திருக்கோயில் வருமானம் 5000 வெள்ளிதான். பெருவாரியான செலவினங்களை கிட்டங்கிக்காரர்களே ஏற்றுக் கொள்ளுகிறார்கள். மலேசியாவில் பொதுவாகவே செட்டியார்களின் ஆலயங்கள் அரசாங்க மானியம் பெறுவதில்லை.
திருமுருகன் திருக்கோயிலில் காலை, மாலை இருவேளை வழிபாடுகள் நடைபெறுகின்றன. திருக்கோயில் தெய்வீகச் செயல்களைத் தவிர்த்துப் பல்வேறு வெளி நிகழ்ச்சிகள் திருக்கோயிலில் நடை பெறுகின்றன. அந்தர்யோகம், பன்னிரு திருமுறை விழா, தெய்வீக வாழ்க்கைச் சங்க நிகழ்ச்சிகள், சமயச் சொற்பொழிவுகள், திருவிளக்கு வழிபாடு பொன்றவை நடைபெறுகின்றன.
ஆண்டொன்றுக்கு இந்தத் திருக்கோயிலில் 100 திருமணங்கள் நடைபெறும். இங்கு வழிபாடு செய்ய பண்டாரம் இருக்கிறார். திருமணம் நடத்தக் கோயில் கட்டணம் 25 வெள்ளிதான்.
|