| ஆலயத்தைப் பற்றி About the temple
ஆலய வரலாறு
1905ம் ஆண்டில் இவ்வட்டாரத்தில் வாழும் பக்தர்கள் உள்ளத்திலே ஒளி பெற்று அகத்திலே தெளிவுற்று மெய்யுணர்வாம் இறையுணர்வால் பேரின்பப் பேரானந்தம் தரும் பேரமுதம் பெற்றின் புற்றிலங்கிடப் பேரொளியின் பேரருள் பெற்று உய்வுற்றிட ஒர் ஆலயம் அவசியமென உணர்ந்ததன் விளைவாக "வேண்டுவார் வேண்டுவதை ஈவான் கண்டாய்" என்னும் திருவாக்கின்படி கலியுக வரதனாம் கந்தனின் கருணைபால் திருவருள் செல்வர்களாம்
இரா. கருப்பையா பிள்ளை நா. இலட்சுமணன் செட்டியார் சி. தம்பிப் பிள்ளை மு. சாமிநாதன் தம்பு
ஆகியோரை நாம் இவ்வமயம் மறவாது நினைவிருக்கும்படி கூறல் நமது கடமையாகும்.
1924ம் ஆண்டு இரண்டாவது உலகப் போர் வரைக்கும் நிர்வாகத்தை கவனித்து வந்தோரில் சிலர் தாயகம் சென்று அங்கேயே தங்கிவிட்டதாலும் மற்றும் சிலர் இயற்கை எய்திவிட்டமையாலும் திரு. தம்பு அவர்களே தனித்து பணிகளை அயராது நடத்தி வந்தார். அதன் பின் திரு. முத்துப் பழனி அவர்கள் தொடர்ந்து நிர்வாகத்தைக் கவனித்து வந்தார்.
இடைக்காலத்தில் தனியாரால் நிர்வகிக்கப்பட்டு வந்த இவ்வாலயம் இரண்டாம் உலகப்போர் முடிவுற்றதும் 1945ம் ஆண்டு முதல் ஆலய அலுவல்களை நிர்வாகக் குழுவாக இயங்கி சீராக செயல்படக் காரணமாயிருந்தவர்களில் குறிப்பாக காலஞ்சென்ற திரு. வா. சி. பொன்னம்பலம், திரு. சிதம்பரம் செட்டியார், திரு. தம்பு, திரு. சேவுகன் செட்டியார், திரு. பூமியுடையார் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்கள் ஆற்றிய அரும் பணிகள் புகழ்மிக்க அழியாத் திருப்பணியாக என்றும் நம்மால் மறக்க முடியாத நிலையில், பசுமையாயிருக்கும் என்றால் மிகையாகாது.
நினைவில் நிலைக்க வேண்டிய நிகழ்ச்சிகளாவன:
1952ம் ஆண்டு திரு. முனியாண்டி (வெஸ்கன்றி தோட்டம் மேற்குப் பகுதி) அவர்களால் கட்டப்பட்ட வசந்த மண்டபம், பழுதடைந்ததால் பொதுமக்கள் உதவியுடன் மீண்டும் 1975ல் புதுப்பிக்கப்பட்டது.
1961/62ம் ஆண்டில் பொதுமக்கள் உதவியோடும் "லாட்டரி" குலுக்குச் சீட்டு மூலம் பெற்ற பொருள் உதவியுடன் விருஷப மண்டபத்தைத் தவிர்த்து கற்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் நிர்த்த மண்டபம் யாவும் புதிதாக கட்டுவிக்கப்பட்டது. அதே ஆண்டுகளில் அரசாங்க மான்ய உதவியுடன் ஆலயத்திற்குச் சொந்தமான ரப்பர் தோட்டம் மறு நடவு செய்யப்பட்டது. அதன்வழி வரும் வருமானத்தையும் ஆலய உறுப்பினர்கள் தரும் நிதியையும் கொண்டு நிர்வாகக் குழுவினர் ஆலயத்தைக் கூடுமானவரை சிறப்பாக நிர்வகித்து வருகின்றார்கள். ஆலய ரப்பர் தோட்டத்தின் அருகில் உள்ள மயானத்தைக் கோவில் நிர்வாகஸ்தர்கள் கண்காணித்து வருகின்றார்கள்.
படிப்படியாகச் சில திருப்பணிகளைக் கண்ட நமது திருக் கோயில் இவ்வாண்டு குரோதன வருஷத்தில் திருமுருகன் திருவருளால் 250,000 ரிங்கிட் செலவில் இக்கோவிலின் சரித்திரத்தில் காணாத ஒரு திருப்பணி நிறைவு பெற்றதனால் இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெறத் திருவருள் கை கூடி இருக்கிறது.
தற்போது இடம் பெற்ற திருப்பணிகளாவன:-
1. பிள்ளையார் கோவில் பெரும்பாலும் புதிதாகக் கட்டப்பட்டது. 2. ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் (மூலஸ்தானம்) கர்பக்கிரகம், சுற்றுப் புறச் சிற்ப வேலைகளுடன் விமானமும் கட்டப்பட்டது. 3. ஆறுமுக சுவாமி கோவில் புதிதாகக் கட்டப்பட்டது. 4. ராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் சுற்றுய் புறச்சிற்ப வேலைகளுடன் விமானமும் கட்டப்பட்டது. 5. நவக்கிரகங்கள் இடம் மாற்றிப் புதுக்கட்டிடத்தில் ஸ்தாபிக்கப்பட்டன. 6. வைரவர் சுவாமி கோவில் புதிதாகக் கட்டப்பட்டது. 7. சண்டேஸ்வரர் கோவில் புதிதாகக் கட்டப்பட்டது. 8. நாகதம்பிரான்/சந்தான கோபாலர் கோவில் இடம் மாற்றிப் புதிதாகக் கட்டப்பட்டது. 9. மணிக் கோபுரம் இடம் மாற்றிப் புதிதாகக் கட்டப்பட்டது. 10. பலிபீடம் புதிதாகக் கட்டப்பட்டது. 11. மஹா மண்டபத் தரைக்கு "மார்பிள்" கல் பதிக்கப்பட்டது. 12. மின்சார வேலைகள் அனைத்தும் புதிதாககச் செய்யப்பட்டன.
மேலும் புதிய கோவில்களின் நிர்மாணிப்புக்கும் மின்சார வேலைகளுக்கும் ஆலோசனைகளை நல்கிய H.S.S. Consult, Civil Engineers, நிறுவனத்திற்கும் Sri S. Mahandran Electrical Consultant அவர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாலயத்தில் மூல மூர்த்தியாக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ வள்ளி தெய்வயானை சமேதரராக வீற்றிருப்பதோடு, விநாயகப் பெருமான், ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ வள்ளி தெய்வயானை சமேதரராய் சண்முகப் பெருமான், நாகதம்பிரான், நவக்கிரகங்கள், வைரவர், சண்டேஸ்வரர் ஆகிய மூர்த்திகளும் பரிவார மூர்த்திகளாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.
இத்துடன் கொடி ஸ்தம்பமும் பிரதிஷ்டை செய்தற்கு வேண்டிய ஏற்பாடு மேற்கொள்ளப் பெற்றுள்ளன.
ஆலயத் திருப்பணி வேலைகளில் பொதுமக்களது நிதியுதவியுடன் கட்டப்பட்ட கட்டடங்களைத் தவிர்த்துத் தனிப்பட்ட செலவில் கட்டப்பட்ட கட்டடங்கள், பகுதிகளின் விபரங்களும் கட்டுவித்த அன்பர்களின் பெயர்களும் பின் வருவன:
திருப்பணிகள் ------ அன்பர்களின் பெயர்கள்
விநாயகர் கோவில் ------ திரு. K. குமாரசாமி குடும்பத்தினர் ஆறுமுக சுவாமியும் கோவிலும் ------ திரு. க. முருகேசு குடும்பத்தினர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் ------ திரு. K. கதிரிப்பிள்ளை குடும்பத்தினரும் திரு. சி. தம்பையா அவர்களும் நவக்கிரகங்கள் கோவில் ------ திரு. பொ. தி. சம்பந்தர் அவர்கள் சண்டேஸ்வரரும் கோவிலும் ------ திரு. த. கார்த்திகேசு அவர்கள் வைரவர் சுவாமி ------ திரு. க. குலரத்தினம் அவர்கள் வைரவர் கோவில் ------ திருமதி சுந்தர மூர்த்தி அவர்களும் திருமதி சுப்பிரமணியம் அவர்களும் நாகதம்பிரான் கோவில் ------ திருமதி நாகலிங்கம் துவார பாலகர் ------ Dr. R. T. அரசு அவர்கள் அர்த்த மண்டப, ஸ்தபன மண்டப தரைகளுக்கு "மார்பில் கல்", மின்சார வேலைகள் ------ திரு. E. திருநாமம் குடும்பத்தினர்.
இவ்வாலயத்தில் காலை 7.30 மணிக்கும் மாலை 6.30 மணிக்கும் இருகாலப் பூஜைகள் நடைபெறுகின்றன. இதுதவிர்த்து ஆண்டு தோறும் பஞ்சாங்கத்தில் உள்ள முக்கிய விழாக்கள் அனைத்தும் நடைபெறுகின்றன. கிறிஸ்த்தவர்களின் புத்தாண்டு பண்டிகையும் இவ்வாலயத்தில் பெரு விழாவாகக் கொண்டாடப்படுவதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
மேலும் சமய வகுப்பு, தமிழ் வகுப்பு சங்கீத வகுப்பு, நடன வகுப்பு, மலையாள வகுப்பு யாவும் இங்கு நடைபெறுகின்றன.
சென்ற சில ஆண்டுகளாகத் திருமுறை விழா மிக விமரிசையாக நடைபெறுகின்றது. இதில் உலுலங்காட் மாவட்டத்திலுள்ள பிள்ளைகளும் பெரியோர்களும் பங்குபெறுகின்றனர். வெற்றி பெற்றவர்களுக்குத் தகுந்த பரிசுகளும் அளிக்கப்படுகின்றன. இப்போது வாசகசாலை ஒன்றும் சிறிய அளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பொது மக்களின் வசதிக்காக அரசாங்க திருமணப் பதிவு சட்டத்தைத் தேசிய ரீதியில் அமுல் செய்து கோவில்களில் திருமணங்கள் பதிவு செய்யப்படுகின்றது. நமது ஆலயத்திலும் இரு உதவித் திருமணப் பதிவாளர்களை அரசாங்கம் நியமித்து அவர்களால் திருமணங்கள் சென்ற மூன்று ஆண்டுகளாக நடைபெறுகின்றது.
மூன்று தர்மகர்த்தாக்கள் தேவஸ்தானத்தின் சொத்துக்களுக்குப் பொறுப்பாளர்களாகப் பணியாற்றுகிறாகள்.
ஆலயப் பணிகளை ஆற்றுவதற்க ஒரு பரிபாலன சபை இருக்கிறது. இப்பரிபாலன சபை அரசாங்கச் சட்டத்தை அனுசரித்து அதன்படி செயற்படுகின்றது. நிர்வாகஸ்தர்கள் ஆண்டு தோறும் மஹா சபைக் கூட்டத்தில் அங்கத்தினர்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். கோவில் திருப்பணிகளை விரைவாகவும் நல்ல முறையிலும் செயல்படும் பொருட்டுத் தேவையான வேலைகளில் சில உபகுழுக்களைத் தேர்ந்தெடுப்பதும் உண்டு.
திருமுருகன் திருவருளால் நிர்வாகஸ்தர்களின் அயரா முயற்சியினாலும், பொது மக்களின் அன்பளிப்பாலும், ஆலய அன்பர்களின் தயாள குணத்தாலும் ஆலயம் இன்று கோலாகலமகக் காட்சி அளிக்கின்றது.
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்"
என்ற முது மொழிக்கிணங்க காஜாங் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ வள்ளி தெய்வயானை சமேதரராக இருந்து தம்மை அணுகும் அடியார்கள் அனைவருக்கும் திருவருள் புரிந்து வருகிறார். நாம் அவரின் திருவருளைப் பெற என்றும் அவர் நாமத்தைச் சொல்லி வணங்குவோமாக.
"அவன் அருளாலே அவன்தாழ் வணங்கி"
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மஹா கும்பாபிஷேக வைபவத்தைக் கண்டு களிப்பவர்களுக்கு கலியுக வரதன் கந்தப் பெருமான் எல்லா நலன் நல்கிச் சகல சௌபாக்கியங்களையும் கொடுப்பார் என்பது நியதி. ஆகவே அன்பர்கள் அனைவரும் திரளாக வந்து கண்ணுக்கடங்கா கந்தப் பெருமானின் மஹா கும்பாபிஷேகத்தில் கலந்து அவரின் திருவருள் பெற்று நாடும் நாமும் நல்வாழ்வு வாழ வணங்குவோமாக.
இன்பமே சூழ்க! நல்லோர் வாழ்க!
இங்ஙனம், என்றும் சிவன் பணியில் க. முருகேசு (கௌ. காரியதரிசி)
|